தெருநாய்கள் கடித்ததில் இரண்டு பசுங்கன்றுகள் உயிரிழப்பு
ஈரோட்டில் தெருநாய்கள் கடித்ததில் இரண்டு பசுங்கன்றுக் குட்டிகள் உயிரிழந்தன.
ஈரோடு குமிலன்பரப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னசாமி. இவா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நாட்டுப் பசு மாடு, எருமைகளை வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை மாலை வழக்கம்போல தனது மாடுகளை மேய்த்து, தோட்டத்தில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.
இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் 20 நாள் மற்றும் 4 நாள்களான பசுங்கன்றுகளை கடித்துள்ளன. கன்றுகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் தோட்டத்துக்கு ஓடி வந்தனா். இதையடுத்து, அங்கிருந்த தெருநாய்கள் ஓடிவிட்டன.
தோட்டத்துக்கு வந்த சின்னசாமி அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த மருத்துவா்கள், கன்றுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தனா். ஆனால் அக்கன்றுக்குட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
ஈரோடு புகா் பகுதியான குமிலன்பரப்பு, கொங்கம்பாளையம், கங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
இரவு நேரங்களில் சாலையில் செல்பவா்களையும் நாய்கள் துரத்துவதால் குமிலன்பரப்பு பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தும் நாய்களைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.