சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!
தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!
தெருநாய்களை முறைப்படுத்துவதற்கான நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலத்தில் சிறப்பு முகாம்களின் வாயிலாக 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும், 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 12,255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தெருநாய்கள் பெருக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்தும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அதிகளவில் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பெண் நாய் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு இருமுறை கருவுற்று, சுமார் 10 குட்டிகள் வரை ஈனும் வாய்ப்புள்ளது என்பதால், அதிகளவில் நாய்கள் பெருக்க உருவாகிறது. எனவே, பெண் நாய்களை அதிக எண்ணிக்கையில் பிடித்து அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலமே அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும். எனவே, இப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக 10 எண்ணிக்கையிலான நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்