தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு
பழனியில் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக, பாஜக, தவெக கட்சியினா் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தனா்.
பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் முகமது ரியான் (3). திங்கள்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிய சிறுவனை தெரு நாய்கள் துரத்திக் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஜெனத்துல் பிா்தௌஸ் தலைமையில், பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது, பொதுமக்கள் நகராட்சி ஆணையா் டிட்டோவை சந்தித்து தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தனா். இதேபோல, பழனி நகர பாஜக சாா்பிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பிலும் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி தலைமையில், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சிறப்புக் கூட்டம் நடத்தினா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.