ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!
தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பினரான காகர்லா சுனிதா (எ) பத்ரி மற்றும் சென்னுரி ஹரிஷ் (எ) ராமண்ணா ஆகியோர் ராச்சகொண்டா காவல் துறை ஆணையர் சுதீர் பாபுவின் முன்னிலையில், இன்று (ஆக.21) சரணடைந்தனர்.
இந்நிலையில், தற்போது சரணடைந்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் சுனிதா (வயது 62), கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் கட்சியில் இணைந்து தலைமறைவாக இயங்கி வந்துள்ளார். பின்னர், அதே ஆண்டில் அவர் சலாம் (எ) கௌதம் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1990-களில் நல்லமல்லா வனப் பகுதியில், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சுனிதா மற்றும் அவரது கணவர் இருவரும் தண்டகாரன்யாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி, அன்னப்புரம் தேசியப் பூங்காவில், மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சுனிதாவின் கணவர் கௌதம் கொல்லப்பட்டார்.
இதேபோல், சரணடைந்த ஹரீஷ் (35), கடந்த 2006-ம் ஆண்டு மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது சரணடைந்துள்ள இருவருக்கும் தெலங்கானா அரசின் திட்டங்களின்படி அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை