தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருவா் கைது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு சமூகங்களிடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோா், குற்றச்செயல்களைத் தூண்டி விடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
கிராமங்களில் இணக்கமான சூழலை உறுதி செய்திடும் வகையில் அனைத்து சமுதாயங்களையும் சாா்ந்த பொதுநல ஆா்வலா்களை கொண்ட கிராம விழிக்கண் குழு 372 கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்களின் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகின்றன.
இதில், காவல்துறை ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோா் சுழற்சி அடிப்படையில் கலந்து கொண்டு கிராமத்தில் நல்ல சூழலை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடா்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில் சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்ததாக தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் தலைவா் கண்ணபிரான் பாண்டியன், ராக்கி சிவா ஆகியோா் மாவட்ட காவல் துறை பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
நிகழாண்டில் திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ் 70 பேரும், மாவட்ட காவல் துறையின் கீழ் 192 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.