தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுத்துவரும் நாகேந்திரபாண்டியனை அணுகியுள்ளார்.
அவர் தனக்கு அதிகாரிகளை தெரியும் மனுவை கொடுத்து விரைவாக வேலையை முடிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயலட்சுமி அவரிடம் மனுவை கொடுத்து அனுப்பியுள்ளார். உள்ளே சென்றுவிட்டு சிறிதுநேரத்தில் வந்த நாகேந்திரபாண்டியன், அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும், மறுநாள் வரச்சொல்லி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல மறுநாள் ஜெயலட்சுமிக்கு போன் செய்து தேனி புது பஸ் ஸ்டாண்ட் வரச்சொல்லியுள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் ஜெயலட்சுமியை அமரவைத்துவிட்டு, உங்கள் டூவிலரை கொடுங்கள் அதிகாரிகளை பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். காலதாமதம் ஆனதை தொடர்ந்து ஜெயலட்சுமி போன் செய்து பார்த்துள்ளார் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயலட்சுமி வீட்டில் தகவல் சொல்லிவிட்டு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், மதுரை காந்திநகர் ஆசாரித் தோப்பைச் சேர்ந்த நாகேந்திரபாண்டியனை கைது செய்தனர். ஏமாற்றி வாங்கிச் சென்ற டூவிலரை மதுரையில் உள்ள ஒரு கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தார். அந்த டூவிலரை மீட்டனர். நாகேந்திரபாண்டியன் இதுபோல வேறு நபர்களிடம் கைவரிசை காட்டியுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
