தேன் கூட்டில் கல்லெறிந்த இளைஞர்கள்; காட்டில் அத்துமீறியதால் பரிதாபமாக பறிபோன உயிர் - என்ன நடந்தது?
ரம்ஜான் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கேரளா மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஊசி மலை காட்சி முனைக்கு நேற்று சென்றுள்ளனர். அந்த பகுதியில் வழக்கமாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் இடத்தையும் தாண்டிய இளைஞர்கள் மூவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
ஆபத்தான பாறைச் சரிவுகளில் இறங்கிச் சென்றுள்ளனர். அப்போது பாறையில் தென்பட்ட தேன் கூட்டில் கல்லெறிந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கலைந்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் இளைஞர்களை கொட்டியுள்ளன.
ஒரு இளைஞரின் உடலில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் கொட்டிய நிலையில், அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். தேனீக்கள் கொட்டிய பாதிப்புடன் இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காட்சி முனையில் இருந்த வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் சென்று அந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் அந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம்
இந்த துயரம் குறித்து வனத்துறையினர், " ஊசிமலை காட்சி முனைக்கு நேற்று வந்திருந்த ஆசிஃப், ஜாஃபீர், சினான் ஆகிய மூவரும் வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் யாருக்கும் தெரியாமல் அத்துமீறி நுழைந்துள்ளனர். பாறையில் இருந்த மலைத்தேனீ கூட்டின் மீது கல்லெறிந்து கூட்டைச் சிதைத்திருக்கிறார்கள். ஆக்ரோஷமடைந்த தேனீக்கள் மூவரையும் கொட்டியுள்ளது. உடல் முழுக்க கொட்டுப்பட்ட ஜாஃபீர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

கொட்டு காயங்களுடன் உயிர் தப்பிய மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்க சென்றவர்களையும் தேனீக்கள் விரட்டியதால் கவச உடைகளை அணிந்தும் தீப்பந்தங்களை கையில் எடுத்துச் சென்றும் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீலகிரி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் " என்றனர்.