2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!
தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் 39 இடங்கள் குறையாது என்கிறார்கள்; ஆனால்..!'- கனிமொழி சொல்வதென்ன?
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி என்ற பெயரில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இது தமிழகத்தின் நலனை மையமாகக் கொண்ட கூட்டம். இதில், தனிப்பட்ட வெறுப்புகள், உணர்வுகளுக்காக தமிழகத்தின் நலனை பலி கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை முதல்வர் முன் வைக்கிறார். அங்கே பல்வேறு கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் கேட்கப்பட்டு அது ஒரே குரலில் எதிரொலிக்கும். அதற்குக்கூட வரத் தயங்குகிறார்கள். அங்கே பா.ஜ.க-வினரும் அவர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.
தி.மு.க சார்பில் ஒரு கருத்தைச் சொல்லக் கூடாது. தமிழ்நாட்டின் சார்பில் கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இக்கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பில் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறையாது எனக் கூறியுள்ளார். ஆனால், அது குறித்து தெளிவான விளக்கம் தரப்படவில்லை.

பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்.பி-க்களின் எண்ணிக்கை குறையாது எனக் கூறப்பட்டாலும்... உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகையின் அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 39 எம்.பி-க்கள் என்பது தற்போது மொத்தம் இருக்கக்கூடிய 543 எம்.பி-க்களின் எண்ணிக்கையில் 7.18% ஆகும். ஆனால், தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு 5%-ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

8 முதல் 9 தொகுதிகள் வரை நாம் இழக்க நேரிடும். இதனால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதற்கு ஒரு தெளிவான பதிலை உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ வழங்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பிறகு இதைப் பற்றி பேச முடியாது என்பதால்தான் வரும் முன் காப்போம் என்பதுதான் தமிழ்நாட்டின் மாடல்” என்றார்.