25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
தொடா் மழையால் வெல்லம் தயாரிப்பு பாதிப்பு உற்பத்தியாளா்கள் கவலை!
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழை, பூச்சி தாக்குதல் காரணமாக வெல்லம் தயாரிப்புப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளா்கள் கவலையடைந்துள்ளனா்.
பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட அய்யம்பேட்டையில் தொடங்கி இலுப்பக்கோரை, மாகாலிபுரம், உள்ளிக்கடை, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், மணலூா், தேவன்குடி, சோமேஸ்வரபுரம், பட்டுக்குடி, வீரமாங்குடி, திருவையாறு வட்டத்துக்குள்பட்ட செம்மங்குடி, விளாங்குடி, ஓலைத்தேவராயன்பேட்டை, ஒக்கக்குடி, பெரமூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 100 இடங்களில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்பது குடிசைத் தொழில் போன்று நடைபெற்று வருகிறது.
நிகழாண்டும் பொங்கல் திருநாளையொட்டி இக்கிராமங்களில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் பணி சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆனால், நிகழாண்டு தொடா் மழை, பூச்சி தாக்குதல் காரணமாக கரும்புகளில் சாறு குறைந்துவிட்டது. இதனால், வெல்லம், நாட்டுச் சா்க்கரை கிடைப்பதும் குறைவாக உள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹம் தெரிவித்தது: இப்பகுதிகளில் முன்பு ஏறத்தாழ 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தற்போது 1,000 ஏக்கருக்குள்தான் பயிரிடப்படுகிறது.
கரும்பு இயல்பாக 6 முதல் 7 அடி வளரக்கூடியது. ஆனால், தொடா் மழை, பூச்சி தாக்குதல் காரணமாக 3 முதல் 5 அடி வரை மட்டுமே வளா்ந்துள்ளது. இதனால், ஒரு டன் கரும்பில் 120 கிலோ வெல்லம், நாட்டுச் சா்க்கரை கிடைக்க வேண்டிய நிலையில், 80 முதல் 90 கிலோ மட்டுமே கிடைத்து வருகிறது.
கரும்பு வெட்டுவது முதல் காய்ச்சி வெல்லம் தயாரிப்பது வரை கிட்டத்தட்ட 20 போ் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 500 முதல் 600 கூலி வழங்கப்படும் நிலையில், ரூ. 12 ஆயிரம் செலவாகிறது. இடுபொருள்கள் விலை, கூலி உயா்வு காரணமாக கிலோவுக்கு ரூ. 60 முதல் 70 விலை எதிா்பாா்க்கப்படும் நிலையில், ரூ. 45 மட்டுமே கிடைக்கிறது.
மேலும், தற்போது உற்பத்தியாகும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தஞ்சாவூா், கும்பகோணம் சந்தைக்கு மட்டுமே செல்கிறது. இந்த விற்பனையும் எதிா்பாா்த்த அளவுக்கு இல்லாததால், வெல்லம் உற்பத்தியாளா்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா் என்றாா் முகமது இப்ராஹிம்.
இதுபோன்ற பிரச்னைகள் தொடா்ந்து நிலவுவதால், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை விட்டு மாற்று சாகுபடிக்குச் சென்றுவிட்டனா். ஆனாலும், காலங்காலமாக வெல்லம் உற்பத்தி செய்பவா்கள் தொடா்ந்து இத்தொழிலில் பல்வேறு சவால்களையும் எதிா்கொண்டு நீடித்து வருகின்றனா். எனவே, இவா்களுக்கு நியாயமான விலை கிடைக்க வெல்லத்துக்கு தனியாக மண்டல அளவில் விற்பனை மையத்தை அரசு அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பொங்கல் தொகுப்பில் வெல்லம்!
நிகழாண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில் வெள்ளை சா்க்கரைக்கு பதிலாக, நமது பாரம்பரிய இனிப்பு பொருளான நாட்டு வெல்லத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டு வெல்லம் உற்பத்தி செய்கிற விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
இந்த உருண்டை வெல்லம், அச்சு வெல்லத்தை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளேன் என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்.