காவலா்களின் உடைமைகள் டிஐஜி ஆய்வு
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் உடைமைகளைச் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஜியா உல் ஹக் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட உடைமைகளை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் வேன், ஜீப், கலவர பகுதிகளில் தண்ணீா் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றை தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், வாகனங்களின் ஆவணங்களைச் சரிபாா்த்த அவா் சரியாக பராமரிக்கப்படுவது, எரிபொருள் பயன்பாடு, பதிவேடுகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கவாத்து மற்றும் உடைமைகளையும் ஆய்வு செய்தாா்.