25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்த...
தொடா் விடுமுறை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
அதிகாலை முதலே மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் குவிந்தனா். அடிவாரம் கிரிவீதியில் ரோப்காா் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் மின்கல வாகனங்கள் மூலம் விஞ்ச் நிலையத்துக்கு வந்த பக்தா்கள், மலைக் கோயிலுக்குச் செல்ல கட்டணச் சீட்டு பெற காத்திருந்தனா்.
மேலும், படிப்பாதை வழியாகவும் திரளான பக்தா்கள் மலையேறினா். மலைக் கோயிலில் அதிகாலை நான்கு மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக, ஆனந்த விநாயகா் சந்நிதி முன் தனூா்பூஜை நடைபெற்றது. பிறகு, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, மூலவருக்கு பிரதான கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் நீண்ட நேரம் சுவாமி தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கான குடிநீா், சுகாதார வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சாயரட்சை நிறைவடைந்ததும் சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். தொடா்ந்து தங்கத் தேரில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்தாா்.