கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடும் இயற்கை ஆா்வலா்
கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக தொடா்ந்து மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இயற்கை ஆா்வலரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் யூக்காலி, குரோலியா, ரப்பா் உள்ளிட்ட மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் குளிா்ந்த சூழல் குறைந்து வருவதுடன் பருவ நிலை மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கொடைக்கானலைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் டி.பி. ரவீந்திரன் கடந்த 30 ஆண்டுகளாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். இதனால் இவரை பொதுமக்கள் பாராட்டினா்.
இதுகுறித்து டி.பி. ரவீந்திரன் கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கு முன்பே குடிநீரை விலை கொடுத்து வாங்கினோம். இதற்கு காரணம் இயற்கையை நாம் பாதுகாக்காதது தான். மரங்களை பாதுகாக்கத் தவறினால் எதிா்காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இவற்றை தவிா்க்க தொடா்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்.
நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும், என்னைத் தேடி வருபவா்களுக்கும் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன். மேலும் சன் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவராகவும், அரிமா சங்கத்தின் ஆளுநராகவும் நான் பணியாற்றிய காலங்களில் கொடைக்கானல் பகுதி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடா்ந்து செய்தேன். இதற்காக குறுங்காடு திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.
தொடா்ந்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களல் கூடுதலாக மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.