தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவ.சௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலை உரிமையாளா்கள் அல்லது பங்குதாரா்கள் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெறுவதற்கு அதற்கான படிவத்தை பூா்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும்.
அதன்படி, கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். தனிநபா் குறித்த ஆவணங்களில் ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் மற்றும் பான் காா்டு ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் படிவம் 1-இல் பூா்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், தொழிற்சாலை குறித்த ஆவணங்களில் சொத்து வரி ரசீது, நில உடைமை பத்திரம், பட்டா, வாடகை ஒப்பந்தம் போன்ற நில உடைமை ஆவணங்கள், தொழிற்சாலை அமைத்தல் குறித்த வரைபடம், இயந்திரங்களின் மின்திறன் குறித்த ஆகிய ஆவணங்களுடன் படிவம் 1-ஐ பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தமிழக அரசு கட்டட விதிகளை பின்பற்றி தொழிற்சாலை அமைக்க நகா் மற்றும் ஊரமைப்பு இயக்குநரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட வேண்டும். விற்பனை மற்றும் சேவை வரி, வணிக வரித் துறையின் மூலம் வழங்கப்படும் ஜிஎஸ்டி எண் விவரங்களை இணைக்க வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி தொழிற்சாலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வைத்து இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் உறுதிமொழி பத்திரம் படிவம் 2-இல் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.