தொழிலாளா்களுக்கு வயிற்றுப் போக்கு, மயக்கம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் உணவு அருந்திய 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பாலநல்லூா் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வரும் நிலையில், திங்கள்கிழமை மதியம், தொழிற்சாலையில் உணவு அருந்திய சுமாா் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் உடனடியாக வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் 15 தொழிலாளா்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 15 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.