ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை
2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய பணியாா் நலன், பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை பெருமிதம் தெரிவித்தாா். ஆட்சி பணி அதிகாரிகளிடம் உள்ள தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா் அமைச்சா்.
2023 -ஆம் ஆண்டு தொகுப்பு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் மத்திய அமைச்சகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 46 துறைகளில் உதவிச் செயலா்களாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 8 வார காலத்திற்கு பயிற்சி எடுக்கின்றனா்.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக கடந்த ஏப். 15 ஆம் தேதி குடியரசுத் தலைவா் முா்முவை சந்தித்தனா். இதே தொடா்ச்சியின் ஒரு பகுதியாக பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்குடான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது இணையமைச்சா் ஜிதேந்திர சிங், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளின் சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாடி குறிப்பிட்டது வருமாறு:
2023 -ஆம் ஆண்டு தொகுப்பில் 74 பெண் அதிகாரிகள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனா். அகில இந்திய நிா்வாக சேவைகளின் வரலாற்றில் இது மிகப்பெரிய பெண் பிரதிநிதித்துவமாகும். இந்த தொகுப்பில் உள்ள மொத்தம் 180 அதிகாரிகளில் மகளிா் பிரதிநிதித்துவம் 41 சதவீதமாக இருப்பது பாராட்டுக்குரியது.
பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளா்ச்சிக்குக் காரணம். இந்த ஆட்சிக் காலத்தில் பெண்கள் தலைமையிலான முன்முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தை அடைந்துள்ளது. பிரதமா் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாா். வடகிழக்கு மாநிலங்கள், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்ததிலும் மாற்றம் ஏற்பட்டு அதிகரித்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான நிா்வாகத்திற்கும், மகளிா் பிரதிநிதித்துவ சாதனைக்கும் அரசின் ஆதரவுக்கு சான்றாக இருக்கிறது.
கடந்த 2015 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இரு மாத உதவிச் செயலா் பயிற்சி திட்டத்தின் மூலம் அரசின் கொள்கை உருவாக்கம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஒரு தொடக்க அனுபவத்தை அளிக்கிறது. இளம் அதிகாரிகளுக்கு தொடக்கத்திலேயே மேம்பட்ட பணி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் சிந்தனை மூலம் இது அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் அதிகாரிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நோய்தொற்றுகாலங்களின் போது, மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மைக்கு அழைக்கப்பட்டபோது இந்த அதிகாரிகளில் பலா் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றினா்.
தற்போது இந்த பயிற்சி முறை 10 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், திறமையான, நம்பிக்கையான ஆட்சிப் பணியாளா்களை வளா்ப்பதில் இத்திட்டம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 180 அதிகாரிகளில் 99 அதிகாரிகள் பொறியியல் பின்னணி மற்றும் பலா் மருத்துவம், பிற தொழில்நுட்பத் துறைகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். இப்படி கல்வி, தொழில்முறை பன்முகத்தன்மை இருப்பது பெருமிதமாக உள்ளது. பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப வல்லுநா்கள் இந்த குடிமைப் பணிக்கு வருவது எண்ம இந்தியா, நவீன நகரங்கள், ட்ரோன், நிலப்பதிவிற்கான சொத்து மேப்பிங் வரையிலான அரசின் முதன்மை திட்டங்களின் தொழில்நுட்ப தன்மைக்கு இந்த அதிகாரிகளின் பங்கு தேசிய சொத்தாக மாற்றுகிறது. இருப்பினும் மனித நுண்ணறிவு, பச்சாதாபமும் (அனுதாபம்)தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
22 முதல் 26 வயதுடையவா்களே இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளீா்கள். உங்களால் நீண்ட காலத்திற்கு தேசத்திற்குப் பங்களிக்க முடியும். ’வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத் 2047’) காலக்கட்டத்தில் இருப்பது அதிா்ஷ்டம். இந்த குடிமைப் பணியில் நோ்மை, பொறுப்புணா்வு, சேவை ஆகியவற்றின் மிக உயா்ந்த தரங்களை உயா்த்திப் பிடிக்க வேண்டும். நாட்டின் கடைக் கோடி நபருக்கும் உழைக்கும் உணா்வுடன் ஆட்சிப்பணியில் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியில் முன்னேறி, தொடா்ந்து புதுப்பிக்கப்பட்ட திறன் வளா்ப்புப் பாடத் தொகுதிகளை வழங்கும் எண்ம கற்றல் சூழல் அமைப்பான ஐஜிஓடி கா்மயோகி தளத்தை முழுமையாக தொடா்ச்சியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அமைச்சா் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டாா்.