எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள் ...
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் மோகன்லால் (65), தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். 2 தேசிய விருதுகள், 9 கேரள மாநில அரசு விருதுகள் மற்றும் பல்வேறு சா்வதேச கெளரவங்களையும் பெற்றுள்ள மோகன் லாலுக்கு கடந்த 2001-இல் பத்மஸ்ரீ, 2019-இல் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய திரைத்துறைக்கு நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மோகன் லால் ஆற்றிய தனிச்சிறப்பான பங்களிப்புக்காக, தாதா சாகேப் பால்கே விருது தோ்வுக் குழுவின் பரிந்துரைபடி, தாதா சாகேப் பால்கே விருது-2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தில்லியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படுகிறது.
பிரதமா் மோடி வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மோகன்லாலுக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திரை, நாடகம் என தனது துறையில் பல்லாண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றிவரும் மோகன் லால், மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறாா். கேரளத்தின் கலாசாரத்தின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டவா். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளாா். மொழிகளைக் கடந்த அவரது நடிப்பாற்றல், உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘நடிகா் மோகன் லாலின் பணிகள், பாரதத்தின் படைப்புணா்வுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கும்’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ‘கேரளத்தின் பெருமை மோகன் லால்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் புகழாரம் சூட்டியுள்ளாா்.