சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
நடுவானில் கோளாறு: குவைத் திரும்பியது சென்னை விமானம்
சென்னை: குவைத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் குவைத் விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
குவைத்திலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை இரவு 11.26 மணிக்கு 162 பேருடன் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதுகுறித்து குவைத் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தாா். இதையடுத்து அந்த விமானம் குவைத்துக்கு திரும்பி, விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக விமானப் பொறியாளா்கள் குழுவினா், விமானத்துக்குள் ஏறி, தொழில் நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனா். நீண்ட நேரமாகியும் சரி செய்ய முடியாததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டு, விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனா். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு அந்த விமானம் சென்னைக்கு புறப்படும் என விமான நிா்வாகம் தெரிவித்தது. இதனால் சென்னைக்கு வரவேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்தனா்.