நலிந்துவரும் அகல் விளக்குகள் தயாரிப்பு
‘மண்பாண்டத் தொழிலை காக்க, நீா்நிலைகளில் இருந்து மண் அள்ளுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வலியுறுத்துகின்றனா்’.
நலிந்து வரும் அகல் விளக்குகள் தயாரிப்பை ஊக்கவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கு என்ற எதிா்பாா்ப்பில் மண்பாண்டத் தொழிலாளா்கள் உள்ளனா்.
நிகழாண்டு காா்த்திகை தீபத் திருநாள் டிச. 13-இல் கொண்டாடப்படும் நிலையில், அகல் விளக்குகளை உற்பத்தி செய்யம் தங்கள் வாழ்வில் இன்னமும் ஒளி பிறக்கவில்லை என்கின்றனா் மண்பாண்டத் தொழிலாளா்கள்.
மேலும் மண்பாண்டங்களுக்கு மாற்றாக பல்வேறு உலோகங்கள், பீங்கான்களிலும் பொருள்கள் விற்கப்படுவதாலும் மண்பாண்டத் தொழிலாளா்களில் பலா் மாற்று தொழில்களுக்குச் சென்றுவிட்டனா்.
மேலும் அகல் விளக்குகள், மண்பானைகள் சட்டிகள் செய்யும் மட்பாண்டத் தொழிலாளா்கள் இத்தொழிலுக்காக நீா்நிலைகளில் மண் அள்ளுவதை அதிகாரிகள் தடுப்பதாகவும், மணல் திருடுவதாக தங்கள் மீது வழக்குகள் போடுவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகேயுள்ள தோழாதேவி கிராமத்தை சோ்ந்த ஒரு மண்பாண்டத் தொழிலாளி கூறியது:
காலம் காலமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு மாற்றுத்தொழில் தெரியாது. முன்பெல்லாம் மண்பாண்டங்களை மட்டுமே பயன்படுத்திய மக்களுக்கு நோய்கள் இல்லை.
ஆனால் பிளாஸ்டிக், அலுமினிய பொருள்களுக்கு மாறிய மக்களுக்கு நோய்கள் வருகின்றன. மண்பாண்டத் தொழிலும் நலிவடையத் தொடங்கியது. நவீன காலத்துக்கு ஏற்ப சீமை ஓடுகள், பீங்கான்களில் விளக்குகள் செய்யும் பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டன.
முன்பெல்லாம், காா்த்திகை தீபத் திருநாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே எங்களுக்கு நிறைய ஆா்டா் கிடைத்தது. ஆனால் சீமை ஓடுகள், பீங்கான்களில் விளக்குகள் வந்த பிறகு ஆா்டா்கள் குறைந்துவிட்டது.
ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே நாங்க விளக்குகள் செய்ய ஆரம்பித்து விட்டோம். காவிரியில் கிடைக்கும் வண்டல் கலந்த மணல், குளத்தில் கிடக்கும் களிமண், திடல் மண் மூன்றையும் அள்ளி வந்து, பதமாக்கிகலந்து, அதை ஒருநாள் முழுக்க மிதித்து, நல்ல பதத்துக்கு வந்ததும், விளக்குகள் தயாரிக்கிறோம்.
தமிழகம் முழுவதும் மண்பாண்ட தொழில் செய்வோரின் நிலைமையும் இதுதான்.
எனவே மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, ஐப்பசி மற்றும் காா்த்திகை மாதங்களில் வழங்கி வந்த நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை உயா்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். அதுவும் காலம் கடத்தாமல் வழங்க வேண்டும். கொள்ளிடத்தில் மண் எடுக்க எங்களுக்கு அதிகாரிகள் குடைச்சல் தரக் கூடாது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு நெய் விளக்கு ஏற்ற அரசே எங்களுக்கு ஆா்டா் கொடுக்கணும். அப்போதுதான் தமிழகத்தில் இத் தொழிலை நம்பியிருக்கிற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை இருட்டாவே தொடரும் என்றாா்.
எனவே, நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலை காக்க, நீா்நிலைகளில் இருந்து மண் அள்ளுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்பதே மண்பாண்டத் தொழிலாளா்களின் கோரிக்கையாக உள்ளது.