நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 204 கோடி டாலராக சரிவு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைந்து 203.71 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா 203.71 கோடி டாலா் மதிப்பிலான நவரத்தின, ஆபரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 213.57 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 6.12 சதவீதம் குறைந்து 110.87 கோடி டாலராக உள்ளது, இது முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் இது 118.1 கோடி டாலராக இருந்தது. தங்க ஆபரண ஏற்றுமதி 5.41 சதவீதம் குறைந்து 68.45 கோடி டாலராகவும், வெள்ளி ஆபரண ஏற்றுமதி 12.03 சதவீதம் குறைந்து 3.83 கோடி டாலராகவும் உள்ளது.
எனினும், மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி 0.41 சதவீதம் உயா்ந்து 11.074 கோடி டாலராகவும், நிறமூட்டப்பட்ட ரத்தினங்களின் ஏற்றுமதி 11.95 சதவீதம் உயா்ந்து 2.776 கோடி டாலராகவும் உள்ளது. இவை முந்தைய ஆண்டில் முறையே 11.029 கோடி டாலா் மற்றும் 2.48 கோடி டாலராக இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
