உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
நாகா்கோவிலில் தொழிலதிபா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திரத்தில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடா்ச்சியாக நாகா்கோவிலில் தொழிலதிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
நாகா்கோவில், கோட்டாறு அருகே வட்டவிளையைச் சோ்ந்தவா் ரஷீத் அகமது (62). தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்துவரும் இவா், கட்டட ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறாா்.
வட்டவிளையில் உள்ள வீட்டில் இவரது மகன் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இந்த வீட்டுக்கு என்ஐஏ அதிகாரிகள் 6 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை வந்தனா். காலை 6 முதல் 9.30 மணி வரை மூன்றரை மணி நேரம் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், ஆவணங்கள் எதுவும் சிக்கினவா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சோதனையின்போது வீட்டைச் சுற்றி காவல் துறையினா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.
இதுகுறித்து என்ஐஏ தரப்பில் விசாரித்தபோது, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விசாகா நகா் காவல் நிலையத்தில் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். அவா்களது கைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில், அவா்கள் ரஷீத் அகமதுவின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவருடன் பேசியிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.