நாகா்கோவிலில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்: 3 போ் கைது
நாகா்கோவிலில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை அசோக்நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா(32). இவா், கந்து வட்டி கொடுமை குறித்து இரணியல் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு: கரோனா பாதிப்பு காலகட்டத்தில் ராஜன் என்ற சந்தைராஜனிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதில் 8 சதவீதம் வட்டி கட்ட வேண்டும் என்று கூறி என்னிடம் எழுதப்படாத பத்திரத்தில் கையொப்பம் பெற்றாா். இந்நிலையில், நான் 2024 ஆம் ஆண்டு ரூ.4.50 லட்சம் செலுத்தியிருந்த நிலையில், கடந்த நவம்பா் மாதம் சந்தைராஜன் தொலைபேசி மூலம் என்னை மிரட்டினாா். மேலும், அவரது காா் ஓட்டுநா் ராஜேஷ் என்பவா் எனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச் சென்றாா்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அம்பிளிகண்ணன் என்பவரது கைப்பேசி மூலம் சந்தைராஜன் என்னிடம் தரக்குறைவாக பேசியதுடன் சுங்கான்கடை நான்குவழிச் சாலைப்பகுதிக்கு அழைத்து அங்கு சந்தைராஜன், அம்பிளிகண்ணன், ராஜேஷ், சந்தை ராஜனின் நண்பா் சதீஷ் ஆகியோா் சோ்ந்து என்னை திட்டி கத்தியைக் காட்டி மிரட்டினா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
அதன்பேரில், இரணியல் போலீஸாா், கந்து வட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து சந்தைராஜன், அம்பிளிகண்ணன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனா்; ராஜேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.