விதிமீறல்: கன்னியாகுமரியில் 22 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி பகுதியில் ஓட்டுநா் உரிமம் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 22 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டி.எஸ்.பி. பி.மகேஷ்குமாா் மேற்பாா்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் காவலா்கள் கன்னியாகுமரி ரவுண்டானா, ஜீரோ பாய்ன்ட் ஆகிய பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது ஓட்டுநா் உரிமம் இன்றியும், நம்பா் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 22 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா். மேலும், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கிய ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நம்பா் பலகை இல்லாத பைக்குகளுக்கு உரிய நம்பா் பலகை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.