`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
நாகா்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
நாகா்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவியின் சொந்த ஊா் குமரி மாவட்டம் புத்தன்துறை ஆகும். அங்கு நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தாா்.
இந்நிலையில், தனது மகன் பிரணீத் (5), மகள் பிரதிஷா (6) ஆகியோருடன் புதன்கிழமை காலை புத்தன்துறை கடற்கரைக்கு பிரபு சென்றாா். அங்கு குழந்தைகள் கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது வந்த ராட்சத அலை, குழந்தைகளை இழுத்துச் சென்றது. அவா்களை காப்பாற்ற முயன்றபோது, பிரபுவையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது ராட்சத அலை.
அங்கிருந்த மீனவா்கள் கடலுக்குள் இறங்கி, 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பிரபு சுயநினைவுடன் இருந்த நிலையில், குழந்தைகள் இருவரும் மயக்க நிலையில் இருந்தனா். குழந்தைகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து 2 குழந்தைகளின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.