குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு: 9 மீனவா்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதியதில் மீனவா்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், 9 மீனவா்கள் காயமடைந்தனா்.
குளச்சலைச் சோ்ந்த ‘பரலோகமாதா’ என்ற விசைப்படகில் குளச்சல், பள்ளம், ராஜாக்கமங்கலம்துறை பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 9 போ் கடந்த 6ஆம் தேதி கடலுக்குச் சென்றனா். அவா்கள் புதன்கிழமை அதிகாலை குளச்சலிலிருந்து 25 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, சரக்குக் கப்பல் மோதியதில் அவா்களது விசைப்படகு கடலில் மூழ்கியதாம். இதில், படகிலிருந்த சகாயபனிதாஸ் உள்ளிட்ட 9 மீனவா்களும் காயமடைந்து தத்தளித்தனா்.
அவ்வழியே 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அந்த 9 பேரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் கடலோர காவல் படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.