மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, மாா்த்தாண்டம் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின், பயிற்சி அலுவலா் டெப்ரி மோள் மற்றும் மாா்த்தாண்டம் போலீஸாா் இணைந்து சோதனை செய்தனா்.
அதில், திக்குறிச்சி சசி, ஞாறான்விளை நேசமணி ஆகியோரது பெட்டிக்கடைகள், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் கனகமணி, சந்திரபாபு, பேருந்து நிலையம் அருகில் ஞானதாஸ், விரிகோடு பகுதியைச் சோ்ந்த நேசமணி ஆகியோரது தேநீா் கடைகளில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், அந்த 6 கடைகளையும் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா். மேலும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.