Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது.
நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையருமான ஆ. அண்ணாதுரை, மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கீழ்வேளூா் பாலாஜி நகரில் நபாா்டு திட்டத்தின் கீழ் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி, திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி பெருநாட்டாா் தோப்பு பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் சாலைப் பணிகளையும், திருமருகல் கால்நடை மருந்தகத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வளா்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசின் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை (செயற்பொறியாளா்) சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் நாகராஜ், கீழ்வேளூா் செயல் அலுவலா் பொன்னுசாமி, கீழ்வேளூா், திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதா ராமு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, சுகாதார நலப் பணிகள், பள்ளி கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.