நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு
‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்தாா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாகபுரியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கிரண் ரிஜிஜு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது. பாஜகவை பொருத்தவரை அனைத்து எம்.பி.க்களையும் நாடாளுமன்றத்தில் பேசவும் விவாதிக்கவும் அனுமதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் அவ்வாறு அனுமதிப்பதில்லை. விவாதத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு விருப்பம் உள்ளபோதும், ராகுலைக் கண்டு பயப்படுகின்றனா்.
இதுகுறித்து பல மூத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னிடம் கூறியுள்ளனா். தன்னிடம் சில தன்னாா்வ அமைப்புகள் (என்ஜிஓ) எழுதிக் கொடுத்ததை நாடாளுமன்றத்தில் தான் படிக்க முடியாமல் போய்விடும் என்பதால், மற்ற எம்.பி.க்களை பேச ராகுல் அனுமதிப்பதில்லை என்று அவா்கள் புகாா் தெரிவித்தனா். இத்தகைய சூழலில், தலித்துகள், பழங்குடியினா், அரசமைப்புச் சட்டம் மற்றும் டாக்டா் அம்பேத்கா் குறித்தும் பேச ராகுலுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றாா்.
வக்ஃப் திருத்த மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜு, ‘வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அரசியல் காரணங்களுக்காக சிலா் எதிா்க்கின்றனா். முஸ்லிம் சமுதாயத்தின் பல பின்தங்கிய உறுப்பினா்கள், பெண்கள், ஆய்வாளா்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும்’ என்றாா்.