TVK மதுரை மாநாடு: ``சிங்கம் வேட்டையாடத்தான் வெளியே வரும் வேடிக்கை பார்க்க வராது"...
நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக, இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
இந்த தேர்தல் என்பது தனி நபர்களுக்கானது அல்ல. நமது நாட்டை நிறுவியவர்கள், இந்தியா என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதனை உறுதி செய்வதற்கான நடவடிக்கை. இந்தியாவில், நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம், மக்களுக்கு சேவை செய்வதற்காக சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவருக்குத்தான், மாநிலங்களவையின் தலைவராக, நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை காப்பாற்றும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. நான், இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டால், என்னுடைய பொறுப்பை மிகுந்த கவனத்துடனும், நாடாளுமன்ற அவைக்கு உரிய கண்ணியத்துடனும் நடத்துவேன் என்பதை உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
என் மீது நம்பிக்கை வைத்து, வேட்பாளராகத் தேர்வு செய்த இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றைக் காக்க போராடுவோம்.
நமது நாட்டின் அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் நமது மக்களின் நம்பிக்கையோடு, இந்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இருவருமே தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப்.9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.