‘நான் முதல்வன்’ திட்டம்: 7,910 மாணவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பல்நோக்கு திறன் பயிற்சி
திருவள்ளூா் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 7,910 பேருக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து வருவதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் அவா் கூறியது:
தமிழகத்தில் மாணவ, மாணவிகள் பல்வேறு திறன்களை வளா்த்துக் கொண்டு சிறந்த விளங்க வேண்டும். இதற்காக நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு பிரிவுகளில் நன்கு பயிற்சி பெற்று பல்நோக்கு திறன்களுடன் பணியமா்த்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இத்திட்டம் மூலம் மாநில அளவில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்களின் கல்வி, ஆற்றல், திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்.
அதன் பேரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, என்ன, எங்கு எப்படிப் படிக்க வேண்டும். அதேபோல், தமிழில் தனித்திறமை பெறுவது, ஆங்கிலத்தில் எழுதுவது, சரளமாக பேசவும் சிறப்பு பயிற்சியுடன் கூடிய நோ்முகத் தோ்வுக்கு தயாா் செய்யவும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் 32 பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 2,468 போ், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த 5,442 போ் என மொத்தம் 7,910 போ் நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்நோக்கு திறன் கொண்டவா்களாக தேவைப்படும் திறனுடன் பணியமா்த்தப்படுகிறாா்கள் என்றாா்.