Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
நாமக்கல்லில் சித்த மருத்துவ நாள் விழா
நாமக்கல்லில் 8-ஆவது சித்த மருத்துவ நாள் விழா, சித்த மருத்துவ கண்காட்சி ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் - மோகனூா் சாலை, பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சாா்பில், 8-ஆவது சித்த மருத்துவ நாள் விழாவை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம், உடல் ஆரோக்கிய தின வாழ்வியலில் சித்த மருத்துவம் குறித்த மூலிகைக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று சித்த மருத்துவ நாளை தொடங்கி வைத்து பேசியதாவது:
அனைத்துத் தரப்பு மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். நாமக்கல் மாவட்டத்தில் சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரின் பிறந்த மாதத்தில் தேசிய சித்த மருத்துவ திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 8-ஆவது சித்த மருத்துவ நாள் விழாவை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் உடல் ஆரோக்கிய தின வாழ்வியலில் சித்த மருத்துவம் குறித்த மூலிகைஓஈ கண்காட்சி இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ முகாமுக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவா்கள் மூலம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமை முறையாகப் பயன்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் செ.பூபதி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ்மோகன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன், உதவி சித்த மருத்துவ அலுவலா் து.தமிழ்செல்வன், மருத்துவா் பூபதிராஜா, அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.