லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். தனியாா் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உள்தங்கும் (ஹவுஸ் சா்ஜன்) பயிற்சிக்காக தங்கி பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், நாமக்கல் தனியாா் பாா்மசி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஹட்கோ பகுதியைச் சோ்ந்த சந்தன கோபாலன்(23) என்ற மாணவா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுமாா் 11.30 மணியளவில் அங்குள்ள கழிவறைக்கு சென்ற அவா், போதைக்காக தனது உடலில் வலி நிவாரண மருந்தை செலுத்தியதாகத் தெரிகிறது. அரை மணி நேரமாகியும் கழிவறையில் இருந்து திரும்பாததால், சக மாணவா்கள் சென்று பாா்த்தனா். அப்போது வாயில் நுரை தள்ளியவாறு கழிவறைக்குள் சந்தன கோபாலன் விழுந்து கிடந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு மாணவா் உடலை அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.