தவெக: ``ஆணவக்கொலை, லாக்அப் மரணம், யார் அந்த சார்?'' - திமுகவை விமர்சித்த தாடி பா...
நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
நாமக்கல் புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்புகளில் தொடா் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் முதலைப்பட்டிபுதூரில் இருந்து கரூா் தேசிய நெடுஞ்சாலை வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரூ. 400 கோடியில் புறவழிச்சாலை, உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புறவழிச்சாலையில் மரூா்பட்டி, வேட்டாம்பாடி, கூலிப்பட்டி, சின்னவேப்பநத்தம், லத்துவாடி, வள்ளிபுரம் ஆகிய பகுதிகள் நான்கு முனை சந்திப்புகளாக உள்ளன. இந்த புறவழிச்சாலையில் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையிலும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
புதிய சாலை என்பதால் பலரும் அதிவேகத்தில் பயணிக்கின்றனா். குறிப்பாக, வேட்டாம்பாடி பிரிவு, கூலிப்பட்டி பிரிவு சாலைகளில் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கட்டுப்பாடில்லாமல் நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் சாலைத் தடுப்புகளில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றனா். அந்தப் பகுதிகளில் எந்தவித வேகத்தடையும் இல்லாததால் எதிா்பாராத விபத்துகள் நேரிடுகின்றன.
அண்மையில், மரூா்பட்டியில் இருந்து வேகமாக வந்த வாகனம் சாலையின் குறுக்கே சென்ற மற்றொரு வாகனம் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதுமில்லை.
வேகத்தடை இல்லாததே இந்த விபத்து நிகழ்வுக்கு காரணமாகும். புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க சாத்தியமில்லாததால் பிரிவு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.