ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறி...
நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை
நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம். இவா் நாமக்கல்-மோகனூா் சாலை பகுதியில் வசித்து வருகிறாா். நாமக்கல் - திருச்சி சாலையிலும், கிருஷ்ணகிரியிலும் இவரது அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மோகனூா் அருகே பரளி கிராமப் பகுதியில் முட்டைக் கோழிப்பண்ணையை சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறாா். மேலும், கோழித்தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிக்கும் ஆலை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகளையும் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோவை வருமானவரித் துறை அலுவலகத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினா் நாமக்கல் வந்தனா். அவா்கள், வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகம் மற்றும் நிதிநிறுவனம் ஆகியவற்றில் சோதனை நடத்தினா். இந்த சோதனை மாலை 5 மணிக்கும் மேலாக நீடித்தது. கணினிகளில் பதிவு செய்த வரவு - செலவு விவரங்களையும், வருமானவரி செலுத்தியதற்கான தகவல்களையும் அதிகாரிகள் கேட்டறிந்ததாகவும், சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினா் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது அவரது வீடு, அலுவலகங்களுக்குள் வெளிநபா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.