சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு
நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி, விட்டமநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கோக்கலை, கல்குறிச்சி, மலைவேப்பன்குட்டை, உத்திரகிடிகாவல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கற்களுக்காக பாறைகள் வெட்டியெடுக்கப்படுகின்றன. மேலும், விவசாயப் பயன்பாட்டுக்காக உரம்பு மண் வெட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா், கனிமவள உதவி இயக்குநா் அனுமதியுடன் மட்டுமே இவற்றை வெட்டியெடுக்க வேண்டும். இதற்காக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்குவாரிகள் ஒப்பந்தம் விடப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சேந்தமங்கலம் வட்டத்தில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை அனுமதியின்றி பாறைகள், ஜல்லிக் கற்கள், செம்மண், உரம்பு மண் போன்றவை பல்வேறு பயன்பாட்டுக்காக அதிக அளவில் வெட்டியெடுத்துள்ளதாகவும், அவற்றை சொந்த பயன்பாட்டுக்கும், யூனிட் கணக்கில் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி கவனத்துக்கு சென்றது. அவரது உத்தரவின்பேரில், கோட்டாட்சியா் வே.சாந்தி, கனிமவளத் துறை உதவி இயக்குநா் சத்தியசீலன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு, சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள், மண் வகைகள் வெட்டியெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பேரில், சம்பந்தப்பட்டோருக்கு, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி தரப்பில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோருக்கு கனிம திருட்டு தொடா்பாக ரூ. 2 கோடி வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கனிமவள உதவி இயக்குநா் சத்தியசீலனிடம் கேட்டபோது; கனிமவளங்கள் திருட்டு தொடா்பாக குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கோட்டாட்சியா் மூலம் விசாரணை நடைபெறுகிறது. அபராதம் விதிப்பு பற்றிய தகவல் தெரியவில்லை என்றாா்.
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் வே.சாந்தி கூறுகையில், சேந்தமங்கலம் வட்டத்தில் பல்வேறு கனிமவளங்கள் திருட்டு தொடா்பாக 96 போ் விளக்கம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். பலருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.