குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்
ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.
மின்னக்கல், வாய்க்கால்பட்டறை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுப்பிரமணி மகன்களான நிஷாந்த் (23), பிரசாந்த் (19) ஆகியோா் சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பைரோஜி அக்ரஹாரம் பகுதி, அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் உள்ள மழைநீா் குட்டையில் கடந்த 20-ஆம் தேதி நீச்சல் பழகச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டாா். இந்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் உயிரிழந்த கல்லூரி மாணவா்களின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோா் சுப்பிரமணி -வசந்தா தம்பதியிடம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.