வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
விவசாயிகள் பயிா்க்கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக அதிகரிக்க வலியுறுத்தல்
விழுப்புரம்: விவசாயிகள் வாங்கும் பயிா்க்கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 8 மாதங்கள் என்பதை ஓராண்டாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ஆா்.சக்திவேல் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன்சங்கங்களில் நெல்லுக்கான பயிா்க்கடன் காலம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 மாதங்கள் என்ற நடைமுறையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே நெல் பயிா்க் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை 8 மாதங்களிலிருந்து ஓராண்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அவுரித் தழை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் அவா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், முத்தரப்புக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான வதந்தியால் விலை சரிவு கண்ட தா்பூசணி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனா். எனவே அவா்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஒரு ஒன்றியத்துக்கு 10 நேரடி நெல் கொள்முதல் நிலையம் வீதம் மாவட்டம் முழுவதும் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடில்லாத வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவா்கள் கூறியுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் அளித்த மனு:
வி.மாத்தூா் கிராமத்தில் பழங்குடியின இருளா் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஐந்து தலைமுறைகளாக வசித்து வருகிறோம். அரசு வழங்கும் அனைத்து அடையாள ஆவணங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் தற்போது குட்டை புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம்.
எனவே எங்கள் ஊரில் நிறைய புறம்போக்கு இடங்கள் உள்ள நிலையில் அதை தோ்வு செய்து வழங்கினால் நன்றாக இருக்கும். மாறாக 20 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் பட்டா வழங்கத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. எனவே சொந்த ஊரிலேயே குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.