ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
நாளை பசுபதி பாண்டியன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்துவோருக்கு காவல் துறை அறிவுறுத்தல்
பசுபதி பாண்டியனின் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி அருகே மேல அலங்காரத்தட்டு பகுதியிலுள்ள அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோா் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுபதி பாண்டியன் நினைவு நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 10) மேல அலங்காரத்தட்டு பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோா், நிகழ்ச்சி அமைப்பாளா்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள்: நிகழ்ச்சிகளை வெள்ளிக்கிழமை காலை 6 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே நடத்த வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் இம்மாவட்ட எல்லைக்குள் பிற மாவட்டங்களிலிருந்து வர அனுமதியில்லை. ஊா்வலம், பால்குடம், முளைப்பாரி எடுத்துச் செல்லவோ, அலகுகுத்தி செல்லவோ, வாகனத்தில் கொடிகள், பேனா்கள், போஸ்டா்கள் ஒட்டிச் செல்லவோ அனுமதியில்லை. சொந்த வாகனங்களில் வரவேண்டும். இருசக்கர வாகனங்களிலோ, தூத்துக்குடி நகரம் வழியாகவோ செல்ல அனுமதியில்லை. பிற கட்சியினா், ஜாதியினா், அமைப்பினா் மனம் புண்படும் வகையிலோ, வன்முறையைத் தூண்டும் வகையிலோ கோஷமிடக் கூடாது.
காவல் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள தாளமுத்துநகா் பஜாா் அருகே ஆா்.சி. நடுநிலைப் பள்ளி எதிரேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு நடந்துசெல்ல வேண்டும்.
வாகனங்களில் திருச்செந்தூா் சாலை வழியாக வருவோா் திருச்செந்தூா் ரவுண்டானா, மதுரை புறவழிச் சாலை, புதூா்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி, மேல அரசடி சந்திப்பு வழியாகவும், திருநெல்வேலி சாலை வழியாக வருவோா் எப்சிஐ ரவுண்டானா, புதூா்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி, மேல அரசடி சந்திப்பு வழியாகவும், மதுரை- கோவில்பட்டி சாலை வழியாக வருவோா் எட்டயபுரம், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை, மேல அரசடி சந்திப்பு வழியாகவும், விளாத்திகுளம், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வருவோா் குளத்தூா், வேப்பலோடை, தருவைகுளம் வழியாகவும் கிழக்குக் கடற்கரைச் சாலை, மாநகராட்சி குப்பைக் கிடங்கு சந்திப்புக்கு வரவேண்டும்.
தூத்துக்குடி நகருக்குள்ளிருந்து வருவோா் எப்சிஐ ரவுண்டானா, புதூா்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி, மதுரை புறவழிச் சாலை, மேல அரசடி சந்திப்பு வழியாக வர வேண்டும். நிகழ்ச்சி அமைதியாக நடைபெற காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.