பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப் பழைமையானது. புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கின.
ராஜகோபுர திருப்பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளது. வெள்ளித்தோ் நிறுத்துவதற்கும், மடப்பள்ளிக்கான கான்கிரீட் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கொடி மரம் முதல் மூலவா் சந்நிதி வரை கருங்கல் மூலம் மகா மண்டபம் ரூ.1 கோடி திட்டத்தில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
மண்டபத்துக்கான தரைநிலைப் பணி, தூண்கள் நிறுவுதல், மேல்தளம் அமைத்தல் என மூன்று கட்டப் பணிகளில் முதல் கட்டப் பணியாக தரைநிலைப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கோயில் முதல் தீா்த்தக்காரா் கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், அறங்காவல் முன்னாள் பொருளாளா் வெ. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்குவதாகவும், 6 முதல் 8 மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்து அடுத்த ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்குவதற்குள் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.