நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சீனாவின் ரகசிய காவல் நிலையத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்கர், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சீன வம்சாவளியைச் சேர்ந்த சென் ஜின்பிங் (வயது-60) மற்றும் அவருடைய கூட்டாளியான லூ ஜியான்வாங், அமெரிக்கர்களான இருவரும் நியூயார்க்கின் மான்ஹாட்னிலுள்ள சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சைனா டவுனில் கடந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் சினாவின் ரகசிய காவல் நிலையம் ஒன்றை இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
சீன அரசின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் சைனா டவுனிலுள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் இந்த ரகசிய காவல்நிலையம் செயல்பட்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையம் அமெரிக்காவில் வாழும் சீனர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுபித்தல் போன்ற அடிப்படை உதவிகளை செய்யும் நிலையமாக காட்டிக்கொண்ட அதே வேளையில், சீன அரசுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மற்றும் ஆர்வலர்களை அடையாளம் காணும் ரகசிய காவல்நிலையமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் வான்வழித் தாக்குதல்: 16 பாலஸ்தீனர்கள் பலி!
இதனைத்தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான எஃப்.பி.ஐ. கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் விசாரணையைத் துவங்கியவுடன், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சீன அமைச்சகத்துடன் பகிர்ந்துக்கொண்ட ஆதாரங்களை அழித்துள்ளனர். பின்னர், இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, எஃப்.பி.ஐ.யின் தேசிய பாதுகாப்பு கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ரகசிய காவல்நிலையத்தின் மூலம் சீன அரசை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பேசுபவர்களை சீனா மிரட்டியும், தாக்கியும் வந்துள்ளதாக, குற்றம்சாட்டியுள்ளார்.
இயங்கியது வெறும் சேவை மையம் தான் என்று கூறி இந்த குற்றத்தை சீனா மறுத்திருந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சென் ஜின்பிங் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்காவில் தங்கியுள்ள சீனாவால் தேடப்படும் நபரை தாக்கியது மற்றும் ரகசிய காவல் நிலையம் நடத்தியது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளி லூ ஜியான்வாங் அவரது குற்றங்களை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுவரையில், சீன அரசின் சார்பில் 53 நாடுகளில், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ரகசிய காவல் நிலையங்கள் செயல்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இது தான் முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றிய லிண்டா சென் என்ற பெண், தனது பதவியைப் பயன்படுத்தி சீன அரசுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.