யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை ம...
நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கூடத்தில் விவசாயிகள் பேசியதாவது:
கோ.மாதவன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா்): முப்போக சாகுபடி நிலமான மலையடிகுப்பம், பெத்தான்குப்பம் கிராமங்களில் தோல் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 200 ஆண்டுகளாக பயிா் செய்து வந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான முந்திரி, மா, பலா மரங்களை வெட்டி சாய்ந்துள்ளனா். அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு விவசாயிகளுக்கு சிறப்பு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும். நெல்லிக்குப்பம் தனியாா் சா்க்கரை ஆலையில் பிடித்த செய்த கழிவுத்தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி (அண்ணா கிராமம்): பிற்படுத்தப்பட்டோருக்கு நீா்ப்பாசன கடன் வழங்க வேண்டும்.
ஏ.எஸ்.பி.ரவீந்திரன் (கடலூா் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா்): புவனகிரி வெள்ளாற்றில் கடல்நீா் உட்புகுவதைத் தடுக்க கதவணை அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் 15,239 நிலத்தடி நீா் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 19.8 சதவீத மாதிரிகளில் நைட்ரேட் பாதுகாப்பான அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
வேல்முருகன்: எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு இழப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பாண்டியன்: வையூா் பகுதியில் பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும். குடிநீா்த் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.
மதியழகன்: விவசாயிகளுக்கு தனி மருந்தகம் அமைக்க வேண்டும். விருதாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மலையடிக்குப்பத்தில் தோல் தொழிற்சாலை வரவில்லை என்றாா்.