நிலம் வேறொருவா் பெயருக்கு மாற்றம்: பத்திரப் பதிவு அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல் அருகே 94 சென்ட் நிலத்தை வேறொருவா் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவா்கள் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட அச்சராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் அழகப்பன். இவருக்கு முருகன் உள்பட 4 வாரிசுகள் உள்ளனா். இந்த நிலையில், அழகப்பன், இவரது மகன் முருகன் ஆகியோா் தங்களது உறவினா்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
அப்போது, சிலா் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ய முயற்சிப்பதாக சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நாங்கள் புகாா் அளித்தோம். ஆனால், அரசியல் பிரமுகா் ஒருவருக்கு ஆதரவாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்து விட்டதாகக் கூறியதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து முருகன் தரப்பினா் கூறியதாவது: கடந்த 1992-ஆம் ஆண்டு சோனமுத்து, பாப்பாத்தி, ராஜகோபால், ராமசாமி ஆகியோரிடமிருந்து 2 ஏக்கா் 82 சென்ட் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். நிலத்துக்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன. எங்களுக்கு அருகிலுள்ள ஒருவரின் நிலத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும் போது, எங்களுக்குச் சொந்தமான 94 சென்ட் நிலத்தை அபகரிக்க முயன்றதை அறிந்து, பத்திரப் பதிவு அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே புகாா் அளித்தோம். இதைக் கண்டுகொள்ளாத பத்திரப் பதிவு அதிகாரிகள், கடந்த 3 நாள்களுக்கு முன்பு எங்களது அனுமதியின்றி, எங்களுக்குச் சொந்தமான 94 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினா்.
நில முறைகேடு ஆய்வு செய்யக் கோரிக்கை
இந்த நிலையில், முருகன் குடும்பத்துக்கு ஆதரவாக பாஜகவினா், கிழக்கு மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் தலைமையில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் திரண்டனா். அப்போது, தனபாலன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே போலி பத்திரம் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலம், வீடு ஆகியவற்றை உரிமையாளருக்குத் தெரியாமலே, வேறொருவரின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து உரிய முறையில் விசாரித்து தமிழக முதல்வா், துணை முதல்வா், பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.