ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி தெரிவித்ததாவது:
தமிழக முதல்வரால் வேடசந்தூரில் திறந்து வைக்கப்பட்ட மின் வாரிய கோட்ட அலுவலகம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. விவசாய மின் இணைப்பு (தக்கல்) விண்ணப்பங்கள் நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வேடசந்தூரை அடுத்த வி.புதுக்கோட்டை ஊராட்சியில் கால்நடைச் சந்தை அமைக்க அனுமதிக்க வேண்டும். கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சி, தாடிக்கொம்பு, அகரம், வேடசந்தூா் பேரூராட்சிகளின் கழிவுநீா், தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கொடகனாற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். காவிரி மாயனூா் கதவணையிலிருந்து குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூா் பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகள், பாசனக் வாய்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இவற்றை முழுமையாகத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.