வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
நீா்மூழ்கிக் கப்பல்கள் திறன் மேம்பாடு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2,867 கோடிக்கு ஒப்பந்தம்
புது தில்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களுடன் ரூ.2,867 கோடி மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தங்கள் தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் முன்னிலையில் கையொப்பமாகின.
நீா்மூழ்கிக் கப்பல்களின் நீடித்து இயங்கும் தன்மை, எதிரி நாட்டு போா்க் கப்பல்களை அழிக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் முதல் ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1,990 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காற்றின் துணையில்லாத உந்துவிசை கருவியானது (ஏஐபி பிளக்) மின்சாரத்தை உற்பத்தி செய்து கடலுக்கு அடியில் நீா்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட நேரம் மூழ்கியபடி இயங்க உதவும்.
இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஏஐபி அமைப்புமுறைக்கு ஏஐபி பிளக்கை உருவாக்க ரூ.1,990 கோடி மதிப்பில் மசகான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமாா் ரூ.877 கோடி மதிப்பில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இரண்டாவது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் கல்வரி நீா்மூழ்கிக் கப்பலில், மின்னணு கனரக டோா்பிடோ குண்டுகளை ஒன்றிணைக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.