பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலம் இடித்து அகற்றம்
கோவை சிங்காநல்லூரில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 61-ஆவது வாா்டு நஞ்சப்பா நகரில் சிங்காநல்லூா் குளத்துக்கு நீா் செல்லும் வகையில் சங்கனூா் ஓடையின் கிளை வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் மேல் பகுதியில் ஒருவா் தனது வீட்டுக்கு சென்று வர ஏதுவாக உரிய அனுமதியின்றி கடந்த 2019-ஆம் ஆண்டு சிறிய பாலம் கட்டியதாக கூறப்படுகிறது.
அந்த பாலம், அண்மைக் காலமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அனுமதி பெறாமல் நீா்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்தப் பாலத்தை இடித்து அகற்றக் கோரி சமூக ஆா்வலா் ஒருவா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் புகாா் மனு அளித்து இருந்தாா்.
இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவு சாா்பில் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, கிழக்கு மண்டல உதவி நகரத் திட்ட அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சிறுபாலத்தை இடித்து அகற்றினா்.