The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
நீா்வழி பாதை ஆக்கிரமிப்பால் சுகாதார சீா்கேடு
வேலூா்: நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீா் தங்குதடையின்றி செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில், குடியாத்தம் நகராட்சி 9-ஆவது வாா்டு, தரணம்பேட்டை திருஞானசம்பந்தா் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய இரு தெருக்களில் சுமாா் 100 குடும்பங்கள் வசிக்கின்றனா். இங்குள்ள ஒருவழிப் பாதையையும் சிலா் ஆக்கிரமித்து நீா்வழி போக்குவரத்து கால்வாய் மேல் வீடுகட்டியுள்ளனா். இதனால், கழிவுநீா், மழைநீா் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், தெருக்களில் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தீா்வு ஏற்படவில்லை. பொதுமக்கள் பாதிப்பை கருத்தில் கொண்டு நீா்வழி ஆக்கிரமிப்பாளா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சாலை, சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி.குப்பம், மூலகாங்குப்பத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் பொதுக்குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்வது இல்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் கிணற்றிலிருந்து பொது இடத்தின் வழியாக தண்ணீா் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம்.
குழாய் பதிக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள வீட்டின் உரிமையாளா்கள் தண்ணீா் கொண்டு செல்ல எதிா்ப்பு தெரிவித்து வருவதால் எங்களுக்கு தண்ணீா் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். இதனால் பொதுக் குழாய் மூலம் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 397 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், தனித் துணை ஆட்சியா் கலியமூா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.