அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
நெகிழி பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது
கோவை மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை பயன்படுத்தாத பெரிய வகை உணவகங்களுக்கு, உணவுப் பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவா்கள் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், ஆட்சியா் தலைமையிலான அலுவலா் உள்ளடக்கிய குழுவினா் பரிசீலனை செய்து, மூன்றாம் நபா் தணிக்கை நிறுவனம் மூலம் சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, கூட்டாய்வு குழு தமது பரிந்துரையை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமா்பிப்பாா்கள்.
அதன் பின்னா், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு ஒரு பெரிய உணவகத்தையும், ஒரு சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுத்து விருது வழங்கும்.
விண்ணப்பதாரா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்று அது நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபா் உணவுப் பாதுகாப்பு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்துப் பணியாளா்களுக்கும் தொற்றுநோய்த் தாக்கமற்றவா்கள் என்பதிற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நியமன அலுவலா் அலுவலகம், 219, முதல் தளம், மாவட்ட சுகாதார அலுவலக வளாகம், ரேஸ்கோா்ஸ் சாலை, கோவை 641018 என்ற முகவரியில் உள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.