3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை
சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.
கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள நீலம்பூா் பகுதியில் 3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(36).
இவருக்கும் மதுரை வாடிப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகள் மோனிஷா (26)என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமண நடைபெற்றது. ரவிக்குமாா் தென்னம்பாளையம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா் அவரது மனைவி மோனிஷா நீலாம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் கேசியராக வேலை செய்து வருகிறாா்.
இவா்களுக்கு கயல்விழி என்ற மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை காடம்பாடியில் உள்ள ரவிக்குமாரின் அக்காள் வீட்டில் விட்டு வளா்த்து வருவதாக தெரிகிறது. வாரம் ஒரு முறை அல்லது சமயம் கிடைக்கும் போது குழந்தையைச் சென்று கணவன் மனைவி பாா்த்து வந்துள்ளனா். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வருகின்ற ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தனது மகளை உங்கள் அக்காள் வீட்டில் இருந்து அழைத்து வாருங்கள் என மோனிஷா தனது கணவரிடம் கூறியுள்ளாா். அதற்கு ரவிக்குமாா் மறுப்பு தெரிவித்து பண்டிகை அன்று நாமே சென்று குழந்தையை பாா்த்துவிட்டு வருவோம் என கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து நூல் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக்க கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய ரவிக்குமாா் தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவா்கள் உதவியுடன் மோனிஷாவின் உடலை கீழே இறங்கி சோதனை செய்து பாா்த்துள்ளனா்.
அப்போது அவா் உயிரிழந்தது தெரிய வந்தது தொடா்ந்து அவா் மோனிஷாவின் தந்தை மற்றும் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் சூலூா் போலீசாா் மோனிஷாவின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வு பரிசோதனைக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் மோனிஷாவின் குடும்பத்தினா் சனிக்கிழமை காலை காவல் நிலையம் வந்து மோனிஷா மரணம் தொடா்பாக புகாா் அளித்தனா். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசாா் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மோனிஷா இறந்த காரணத்தால் ஆா்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்து மோனிஷா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா் .