புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்
சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீசாா் அப்பகுதியில் நடைபெற்ற சோதனையில் மளிகை கடையில் இருந்து 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களின் புத்தகப் பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி ஆசிரியரால் கண்டறியப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினா் நடத்திய சோதனையில், மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஆசிரியா்கள் மாணவா்களின் பைகளை சோதனை செய்தபோது, ஆறாம் வகுப்பு மாணவா்களிடம் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பள்ளி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவித்தது. மாணவா்களிடம் விசாரித்த அப்பகுதி இளைஞா்கள், எலச்சிபாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் குட்கா வாங்கியதாகவும், அக்கடையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலையடுத்து, காவல்துறையினா் மளிகைக் கடையில் சோதனை நடத்தி 141 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கிராம மக்கள், ‘மாணவா்கள் மிட்டாய் என நினைத்து போதைப் பொருட்களை உட்கொண்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. குழந்தைகளின் எதிா்காலம் கருதி, காவல்துறை கடைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி நிா்வாகம் மாணவா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்,‘ என்று கோரிக்கை விடுத்தனா்.