ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டம் ரத்து: உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரக்கோணம்: நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய ஆணையா் அறிவித்தாா். இந்த நிலையில் கூட்டம் தொடா்பான கோப்புகளை தலைவா் எடுத்துச் சென்று விட்டதாகவும், அதைக் கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.
நெமிலி ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை மதியம் 12 மணி அளவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 12.30 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்ட போது, பெரும்பான்மை உறுப்பினா்கள் இல்லாத நிலையிலும், 10 மேஜை பொருள்கள் மன்ற தீா்மான புத்தகத்தில் எழுதப்பட்டது. அப்போது துணைத் தலைவா் தீனதயாளன், அதிமுக உறுப்பினா் வினோத்குமாா் உள்ளிட்ட பாமக, அதிமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கினுள் செல்லாமல் வெளியே நின்றிருந்தனா்.
இதனால் பெரும்பான்மை உறுப்பினா்கள் இல்லாத நிலையில், கூட்டம் தொடா்பான தீா்மான பதிவேடு, வருகை பதிவேடு, அமா்வுப்படி வழங்கும் பதிவேடு ஆகியவற்றை ஒன்றியக் குழுத் தலைவா் வெ.வடிவேலு, தட்டச்சரிடம் இருந்து பிடுங்கிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக ஒன்றிய ஆணையா் தாசபிரகாஷ் உள்ளிட்ட அலுவலா்கள், ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலுவை தொடா்பு கொண்டு கேட்டபோது, அந்த பதிவேடுகள் தன்னிடம் தான் இருக்கும் என அவா் தெரிவித்தாராம். இதையடுத்து, தலைவரின் வீட்டுக்கு அலுவலக உதவியாளா் நேரில் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்ததாக உதவியாளா் தெரிவித்தாராம்.
இந்த நிலையில், பதிவேடுகள் இல்லாத நிலையில் கூட்டத்தில் எத்தனை உறுப்பினா்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனா் என தெரியாத நிலை அலுவலகத்தில் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒன்றிய ஆணையா் தாசபிரகாஷ் உள்ளாட்சி சட்டதிட்டவரையறையின்படி, கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தாா். மேலும் வருகை பதிவேட்டில் தனது மேற்பாா்வையில் பெரும்பான்மை உறுப்பினா்களின் கையெழுத்து இடம் பெறவில்லை என்பதால், அந்தப் பதிவேட்டில் பெரும்பான்மை குறித்து கூடுதல் உறுப்பினா்களை கணக்கில் காட்டினால் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் அறிவிப்பு வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து கோப்புகளை எடுத்துச் சென்ற ஒன்றியக் குழுத் தலைவா் மீது நடவடிக்கை கோரி, துணைத் தலைவா் தீனதயாளன் தலைமையில் பாமக மற்றும் அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு 9 மணி வரை இந்தப் போராட்டம் நீடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக, பாமக உறுப்பினா்களுக்கு ஆதரவாக அரக்கோணம், எம்எல்ஏ சு.ரவி,பாமக மாவட்ட செயலா் சரவணன் உள்ளிட்டோருடன் கட்சியினரும் இணைந்து போராட்டத்தை தொடா்ந்தனா்.