குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? ...
நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். விவசாய கூலித் தொழிலாளியான அவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பொன்ராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. கைகளில் கம்பு, கற்கள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த அந்தக் கும்பல், வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்து சூறையாடியது.

அதை பார்த்து அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் இருந்த பொன்ராஜ் குடும்பத்தினர், அந்தக் கும்பலைத் தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த கும்பல், பள்ளி மாணவி ஜோதி, கல்லூரி மாணவியான டெல்சி உள்பட பொன்ராஜ் குடும்பத்தினர் 5 பேரையும் சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்த அந்தக் கும்பல், கம்பும் கற்களும் கொண்டு சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொன்ராஜ், திவ்யலட்சுமி, ஜெனிஷா, ஜோதி மற்றும் டெல்சி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கம்பால் அடித்தபோது கீழே விழுந்த பெண்களின் கால்களில் பாறைக் கற்களை தூக்கிப் போட்டுள்ளனர். இதில் சிறுமி உள்பட பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பொன்ராஜ் குடும்பத்தினரை 6 பேர் கொண்ட கும்பல் தெருவில் வைத்து சரமாரியாகத் தாக்கிய காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த கொடூரக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் நடந்த போது பொன்ராஜ் குடும்பத்தினருக்கு உதவ யாரும் வரவில்லை. அந்த கும்பல் சென்ற பின்னர் அங்கிருந்தவர்கள் வந்து அனைவரையும் மீட்டு, குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் மற்றும் நிலத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பணகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதல் நடத்திய ஆனந்தராஜ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொன்ராஜ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடம் காவல்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





















